சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் ஆன்லைன் மூலம் பணப்பட்டுவாடா நடக்கிறதா என்பது குறித்து கிடைக்கப்பெற்ற புகார்கள் அடிப்படையில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது  என்று  தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ” ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு 20 கம்பெனி துணை ராணுவம் வர உள்ளது. ஆனால் இதை 25 கம்பெனியாக அதிகரிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளேன். இதுவரை அதற்கு அனுமதி கிடைக்கவில்லை.

ஆர்.கே.நகர் தெருக்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் வரும் 7ம்  தேதியில் இருந்து பொருத்தப்படும். இதுவரை 196 கேமராக்கள் வந்துள்ளன. டெல்லியில் இருந்து கூடுதலாக கேமராக் கள் கிடைத்தால் கூடுதல் இடங்களில் பொருத்துவோம்.

இதுவரை தேர்தல் பார்வையாளர்கள் 4 பேர் வந்துள்ளனர். மற்ற பார்வையாளர்கள் இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் வந்துவிடுவார்கள். இதுவரை அந்தத் தொகுதியில் 18 பறக்கும்படை மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் அமைத்துள்ளோம்.

இவற்றின் எண்ணிக்கை படிப்படியாக 61 ஆக உயர்த்தப்படும். கடந்த இடைத் தேர்தலிலும் 61 குழுக்கள் செயல்பட்டன. காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணிவரை வீடு வீடாகச்சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளலாம். ஆனால் அதற்கு தேர்தல் கமிஷனின் அனுமதியை பெற்றிருக்கவேண்டும்.

தேர்தல் பிரசாரத்துக்கு எத்தனை வாகனங்கள், உள்ளூர் ஆட்கள் எத்தனை பேர், வெளியூர் ஆட்கள் எத்தனை பேர் உடன் வருகின்றனர் என்பதை தெரிவித்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் தேர்தல் விதி மீறல் குற்றத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

வாகனங்கள், உடன் வரும் ஆட்கள், பிரசாரம் ஆகியவற்றுக்கு ஆகும் செலவு முழுவதும் வேட்பாளர் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தனி மேடை அமைத்து பிரசாரம் செய்ய இருப்பதாக சொன்னால், அதற்கு ஆகும் செலவு, அவர்கள் பிரசாரம் செய்யும் கட்சியின் வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும்.

ஆன்லைன் அடிப்படையில் பணப்பரிமாற்றம் நடந்தால் அது ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்படும். இதுபோன்ற குற்றத்துக்காக, தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு நடவடிக்கை எடுக்க முடியும். அதுபோல சமூக வலைத்தளங்களும் கண்காணிக்கப்படுகின்றன. அதில் நடக்கும் தேர்தல் பிரசார விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதும், 7ம்  தேதிக்கு மேல் தேர்தல் நடவடிக்கைகள் சூடுபிடிக் கத் தொடங்கும். இந்தத் தேர்தலில் தேர்தல் செலவாக ஒரு வேட்பாளர் அதிகபட் சம் ரூ.28 லட்சம் வரை செலவழிக்கலாம்.” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here