சிங்கப்பூர்: பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேரில் சந்தித்துப் பேசினர்.

அணு ஆயுதப் போர் நடத்துவோம் என்று, உலக நாடுகளை மிரட்டி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், சமீபத்தில் சமாதானக் கொடியை உயர்த்தினார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை நேரில் சந்தித்துப் பேசவும் விருப்பம் தெரிவித்தார். இதை, டிரம்பும் ஏற்றுக் கொண்டார்.

இதன்படி, சிங்கப்பூரில் இன்று (ஜூன் 12) இரு தலைவர்களும் நேரில் சந்தித்துப் பேசிக் கொண்டனர். அப்போது,  அமெரிக்கா – வட கொரியா நாடுகளுக்கு இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அமெரிக்க அதிபர் டிரம்பும், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் கையெழுத்து போட்டனர். குறிப்பாக, அணு ஆயுதத்தை முற்றிலும் ஒழிப்பதற்கு வடகொரியா சம்மதித்துள்ளது.

இதுபற்றி டிரம்ப் கூறுகையில், ‘’இந்த பேச்சுவார்த்தை அனைவரும் எதிர்பார்த்ததை விட சிறப்பானதாக இருந்தது. இனி புதிய சூழலில் இரு நாட்டு உறவு தொடரும். இதனால், அமெரிக்கா, வட கொரிய மக்கள் மகிழ்ச்சியடைவார்கள். வட கொரிய அதிபர் கிம்மை வெள்ளை மாளிகை வரும்படி அழைப்பு விடுத்துள்ளேன்,’’ என்றார்.

இதேபோல, கிம் ஜாங் உன் பேசுகையில், ‘’ கடந்த கால நிகழ்வுகளை மறந்துவிட்டு, உறவை முன்னெடுத்து செல்ல உள்ளோம். வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு நிகழ்ந்துள்ளது. உலகம் பெரிய மாற்றத்தை பார்க்கும்,’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here